பூங்கா வாழ்க்கை
மரங்கள் அடர்ந்த சோலையில் மண்டிக் களிக்கும் மழலைகள்! விடுமுறை வந்ததால் வசந்தம், பாடங்கள் மறந்த பரவசம்! புல்மடி உறங்கும் பெரியோர்; புகலிடம் தேடும் முதியோர்; கவலைகள் மறந்த குடும்பம் கடமைகள் இருந்தும் கூடும்! பறவைகள் போலே யாவரும் பாடித் திரிவதே ஒருசுகம்! இருவர் மட்டுமே உலகில் இருப்பது போன்றோர் நினைப்பில் காதலர் நடத்திடும் குறும்போ கலைஎழில் நிழற்பட விருந்து! பொங்கும் அழகுப் பூவினம் பெங்களூர் தோட்டத்து இரத்தினம்! பரந்து, விரிந்து, மனம்போல் பசுமை விரிக்கும் மரங்கள்!- அவை பணிச்சுமை வளைத்த முதுகை பஞ்சணை ஏந்தும் தாய்தான்! இயற்கையின் மடியில் ஒன்றாய் இன்பமாய்க் கூடும் மாந்தரோ தொந்தியைக் குறைக்கவும் ஓடுவார்; நொந்ததை மறக்கவும் நாடுவார்; அடுக்கு மாடிக் கூட்டுக்குள் அடைபட்டு வெந்தவர் கூடுவார். செங்கதிர் வெயிலில் வாடியோர் சிந்தனை மறந்தே தூங்குவார். மந்திரப் புன்னகை இயற்கை-ஆம் மாறக்குமே இயந்திர வாழ்க்கை!