Posts

Showing posts from July 10, 2019

ஜல்லிக்கட்டு மெரினா புரட்சி

Image
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை உடைத்தெறிந்த மாபெரும் இளைஞர்புரட்சி சென்னை மெரினா கடற்கரையில் ஜனவரி 2017ல் நிகழ்ந்த ஒரு வரலாற்று நிகழ்வு... தமிழ் இளைஞர்கள் மிகவும் கண்ணியமாக ஜனநாயக நெறிகளோடு போராடி உலக மக்களின் கவனத்தையும் ஆட்சியாளர்களின் கவனத்தையும் ஈர்த்து வெற்றி கண்டார்கள். அந்த அகிம்சை வழி புரட்சியால் ஈர்க்கப்பட்டு .. அப்போது என்னால் எழுதி வெளியிடப்பட்ட கவிதை இது ! அரசியல் புழுதியின் அவலங்கள் போக்கி நீடு துயில் நீக்கப்பாடி வந்த நிலாக்கள்! ஆர்ப்பரிக்கும் அலைக்கடல்கள் அடங்கிப்போக சீறிப் பறக்கும் தலைக்கடல்கள் எம் சிங்கங்கள்! தறிகெட்டுப் போன அரசியல் நாடகங்களுக்கு முடிவுகட்டப் பிறந்த எம் புரட்சிதீபங்கள் ! தன்னெழுந்து போராடும் காளையரும் தங்கையரும் விண்ணுயர்ந்த தமிழ்மரபின் கண்ணியத்தின் வடிவங்கள் ! பொன்னெழுத்தில் வரலாறு போற்றும் - நம் புரட்சிப்போர் எண்ணத்திலும் உதிக்காது துரோகம் - அது வீழ்ந்தது பார் ! தமிழன் என்றோர் இனமுண்டு-தனியே நமக்கோர் குணமுண்டு தயந்து பணியும் நம்முள்ளே- தகிக்கும் எரிமலைக் குழம்புண்டு !

இயற்கை எழில் மங்களூர்

Image
ஒரு முறை பணி நிமித்தமாக மங்களூர் பயணித்த போது கண்டு வியந்த இயற்கை எழிலை வார்த்தைகளில் கோர்க்க முற்பட்டு எழுதியது தான் இந்த .. என் மனம் கவர்ந்த கவிதை .... கொண்டல்தவழ் மலை முகடு கொஞ்சும் எழில் காட்டாறு வண்டு உலவும் பூக்காடு வான் உதிர்க்கும் மழைமுத்து சில்லென்றே பரவும் தென்றல் சிலிர்த்து எழும் கிளை மரங்கள் ஆர்ப்பரிக்கும் மலை அருவி அழகு மிளிர் மலையரசி காதல் கொண்டு மரங்கள் இங்கே கருமேகம் தழுவும் விந்தை! நாணம் கொண்ட குமரி யன்றோ?! நனைந்து விழும் கொடியினங்கள் ! மாலை நேர கதிரொளியில் மலையருவி பொன் போல் வீழும். அச்சமுற்ற புள்ளினங்கள் அடைவதற்கு கூடு தேடும் ! செஞ்சேற்றில் திலகமிட்டு செவ்வந்தி மலர்கள் சூடி கொஞ்சும் எழில் பெண்டிர் போலே குதித்தோடும் சிறு நதிகள். மண்ணுலகின் சொர்க்கம் என்றால் மங்களூர் என்றே சொல்வேன்!

வனிதையர் உலகமோ!

Image
இது எனது பெங்களுர் வாழ்வின் மாறுபட்ட உணர்வு... இங்கு கண்ட பெண்ணியம் மாண்பு நான் வேறெங்கும் கண்டதில்லை.. அதன் வெளிப்பாடு தான் இக் கவிதை...   **வனிதையர் உலகம் ** கவின் மலர்த் தோட்டமோ?! புவிவந்த நிலாக் கூட்டமோ?! மாந்தளிர் வண்ணமோ?!- வருடும் தேன் தமிழ்த்தென்றலோ?! கனி இதழ் மொழிகளோ- இமயப் பனி யெனக் குளிருதே! இதுவோர் வனிதையர் உலகமோ?! - மதுரக் கனி தரும் சோலையோ?! இனியொரு அழகுதான்- உலகிலே இருக்குமோ சொல் இயற்கையே! பெங்களூர் பெண்கள்-அழகிலே மயங்குதே காளையர் கண்கள்! நிமிர்ந்து நோக்கும் விழிகளின் வீச்சிலும் இனிந்து உதிர்க்கும் பன்மொழிப் பேச்சிலும் புலவன் பாரதி கண்டகனவு புதுமைப் பெண்களாய் பூத்ததே இங்கு ! ஒளி திகழ் அறிவிலும் மதி முகப்பொலிவிலும் அணி நிறை நட்பிலும் பணி செயும் மாண்பிலும் மான் விழி வீச்சிலும்- இங்கு ஆண் குலம் தோற்றதே !தோற்றதே !

எங்கள் ஊர் பெங்களூர்

Image
பெங்களூர் வாழ் தமிழன் என்ற முறையில் இங்கே வாழ்ந்து கண்டுணர்ந்ததை கவிதையாய் கொட்டி என் மனக்குமுறலை வெளிப்படுத்திய கவிதை இது ..... எங்கள் ஊர் பெங்களூர்   பனிசூழ்ந்த காலையோ வருடும் பணிச்சூழல் கவலையோ நெருடும் ! பகட்டும் கூத்தும் பார்த்திட திகட்டுமோ?! பழகிடத் துணிந்தால் பணங்காசு கேட்குமே! சூழும் நட்புக்கு பஞ்சமே இல்லை சூழல் மாறினால் வஞ்சகம் மீறுமே எல்லை ! வீதிகள் தோறும் சோலைகள் உண்டு விதிகளை மீறும் காளைகள் உண்டு! மாடங்கள் யாவும் காதலர் கூடமே! கூடிடும் யாவரும் காதலர் அல்லவே ! பதவியும் வாழ்வும் உலகத் தரத்திலே! மதிகெட்டுப் போனால் கொளுத்துவார் துரத்தியே! மொழியும் நதியும் இரு கண் போன்றதே! வழியும் குருதியில் இந்தியம் இல்லையே! இனங்கள் பலவும் இணைந்ததோர் நகரம்! மனங்கள் மட்டும் இணையாத துயரம். வைஃபையும் நெட்டும் வான் எல்லாம் தவழும்.. கைப்பேசி மட்டுமே யாவரின் கவனம் ! முகநூல் நட்புக்கு முடிவுரை இல்லை அகமகிழ் நட்பு தான் அமைவதே இல்லை! தொலைந்த ஆடையும் களைந்த கூந்தலும், பெண்ணியம் போற்றலாம் கண்ணியம் போற்றுமோ? குடிகார நட்பும் கிரெடிட் கார்டு தேய்ப்பும் ஆணவம் போற்றலா...

புத்தாண்டு வாழ்த்து

Image
இனிய புத்தாண்டு பிறப்பன்று நண்பர்களுக்குப் பகிர்ந்திட எழுதிய வாழ்த்து மடல் இது... குழலோடும்  யாழோடும்... கொஞ்சும் மழலைப் பண்ணோடும் புகழோடும் பொருளோடும் பொங்கும் நல்லருளோடும்.. பாலோடும் தேனோடும் பாரெங்கும் தமிழுணர்வோடும்... உழவோடும் தொழிலொடும் உலகோர்முன் நிமிர்நெஞ்சோடும்... நீரோடும் காவிரியும் நீதியருள் நல்லரசும்... தாலாட்டும் தழிழன்னை நல்வயிற்று புதல்வர் நாம்.. தரணியெங்கும் தலைநிமிர்ந்து கோலோச்சும் நன்னாளாளும்... ................... மேன்மேலும் வளமை எல்லாம் வழங்கவரும் புத்தாண்டை வாசலெங்கும் கோலமிட்டு நேசமுடன் வரவேற்போம்....! அன்புடன்.. *கோ. பார்த்தசாரதி*

வினாயகர் போற்றி

Image
கணபதியைத் தொழுது எழுதிய என் கவிதையிது .... ஆனை முகத்து ஞானக் கொழுந்தவன்! அரச மரத்தடி அமர்ந்தருள் பெரியவன். எந்தை ஈசன் கோவிலில் முந்தியிருக்கும் முதல்மகன். வலியவன் எளியவன் கருணைக் கடலவன். கற்பகத் தருவவன் பொற்பதம் போற்றுவோம். வலிமையில் மூத்தவன் வாரணம் போன்றவன் எளிமையின் இலக்கணம் - அவன் முன், எலியென அடங்கிடும் தலைக்கனம். கூரிய கண்கள் உணர்த்திடும் செய்தியோ கூர்ந்து நோக்கி கண்டுணர் என்பதே! ஆனைச்செவிகள் அன்புடன் சொல்வது அனைத்தையும் கேட்டு அமைதி கொள் என்பதே! பானை வயிறு உணர்த்திடும் செய்தியோ புண்பட்ட நிகழ்வையும் பண்புடன் செரித்திடும் வலிமை கொள் என்பதே! ஆனைக் கரம் சொல்வதோ அல்லவை களைந்து நல்லவை கொள் என்பதே! ஆனையே அடங்கும் அங்குசம் சொல்வதோ ஐம்புலன் அடக்கும் வல்லமை வேண்டும் என்பதே! ஓம் எனும் எழுத்தில் உறையும் திருவவன் ஓங்கார ரூபன்  ஒப்புயர் முதல்வன் கார் அமர் மேனிக் கணபதியே நின் பதம் கட்டுண்டு கிடப்பதொன்றே என் தொழிலே!

புதிய காலை

Image
ஒரு இனிய காலைப் பொழுதில் எழுதிய கவிதையிது .... பொன்னொளிர் புதிய காலை பண்ணுதிர் பறவைக் கூட்டம் தண்ணெழும் தென்றல் தொட்டுத் தழுவவே சிலிர்த்தெழுந்து வண்ணமாய் பூக்கள் தூவும் வாணுயர் மரங்கள் யாவும் ! தூரிகை ஏந்திய இயற்கை.. துரிதமாய் வண்ணம் தீட்ட மெல்லிய மலர்கள் யாவும் புன்னகை ததும்பும் பொழுதுதான்..இன்றைய காலை!!!

தமிழ்த் திருநாள் வாழ்த்து

இக்கவிதை ஒரு தமிழ் திருநாளன்று நண்பர்களுக்காக படைக்கப்பட்டது...... குலமுயரும் நலமுயரும் - குவலயத்தில் குன்றாது வளமுயரும், வானுயரும் வாழ்வுயரும் - தமிழர் தம் கோலுயரும் குடியுயரும், மண்டியிடா மாண்புயரும்- மாநிலத்தில் மானமிகு மொழியுயரும், சீறுயரும் சிறப்புயரும்- சிந்தையிலே சிங்கநிகர் நினைப்புயரும், நீருயரும் நெல்லுயரும் - நெடிதுவளர் தென்னைபனை மீண்டுயரும், இமயம்வரை கொடியுயரும் - இணையம் எங்கும் நம்மக்கள் நட்புயரும், பொங்கிவரும் பொருளும்வரும்- இப்பொங்கல்முதல் மங்காத வளமுயரும்,  பகலவன்போல் வாழ்வுயரும் தாழ்வகலும் தரமுயரும் - தரணி போற்றும் வரமருளும் தமிழ்த்திருநாள் வாழ்த்துக்கள்!" நட்புடன் கோ.பார்த்தசாரதி

முகவுரை

அன்பர்களே ! நம் அழகிய தமிழன்னைக்கு செய்யும் அரும் பெரும் தொண்டாகவே கருதி எனது கவிதைத் திறனை வளர்த்துக் கொண்டு வருகிறேன். எனது தொழிலும் வாழ்வும் வேறாகினும் தமிழார்வம் என் இரத்தத்தில் ஊறிய உணர்வு. அது என்னை என்றென்றும் எனக்கு மிகுந்த மன மகிழ்வைத் தரும் ஒரு உன்னதமான பணி என்பதை நான் பல முறை அனுபவத்தில் உணர்த்திருக்கிறேன். இந்த வலைத்தளம் இனி என் கவிதைகளை உலகோர் பார்வைக்கு படைக்கும்.. என் தமிழ்த்தாய்க்கு வாசமிகு மலர்களின் மாலையாய் அணி சேர்க்கும் அன்புடன் பார்த்தசாரதி