வினாயகர் போற்றி

கணபதியைத் தொழுது எழுதிய என் கவிதையிது ....

ஆனை முகத்து
ஞானக் கொழுந்தவன்!

அரச மரத்தடி
அமர்ந்தருள் பெரியவன்.

எந்தை ஈசன் கோவிலில்
முந்தியிருக்கும் முதல்மகன்.

வலியவன் எளியவன்
கருணைக் கடலவன்.

கற்பகத் தருவவன்
பொற்பதம் போற்றுவோம்.

வலிமையில் மூத்தவன்
வாரணம் போன்றவன்

எளிமையின் இலக்கணம் - அவன் முன்,
எலியென அடங்கிடும் தலைக்கனம்.

கூரிய கண்கள்
உணர்த்திடும் செய்தியோ

கூர்ந்து நோக்கி
கண்டுணர் என்பதே!

ஆனைச்செவிகள்
அன்புடன் சொல்வது

அனைத்தையும் கேட்டு
அமைதி கொள் என்பதே!

பானை வயிறு
உணர்த்திடும் செய்தியோ

புண்பட்ட நிகழ்வையும்
பண்புடன் செரித்திடும் வலிமை கொள் என்பதே!

ஆனைக் கரம் சொல்வதோ
அல்லவை களைந்து நல்லவை கொள் என்பதே!

ஆனையே அடங்கும்
அங்குசம் சொல்வதோ

ஐம்புலன் அடக்கும்
வல்லமை வேண்டும் என்பதே!

ஓம் எனும் எழுத்தில்
உறையும் திருவவன்

ஓங்கார ரூபன் 
ஒப்புயர் முதல்வன்

கார் அமர் மேனிக் கணபதியே
நின் பதம் கட்டுண்டு கிடப்பதொன்றே என் தொழிலே!

Comments

Popular posts from this blog

நட்சத்திரங்கள் - இது என் சிறுவயது முதல் கவிதை

தாமரையின் காதல்

நட்பின் இலக்கணம் கண்ணனும் குசேலனும்