தாமரையின் காதல்

கதிரவனைக் கண்டு தாமரை காதல்கொள்ள, அதைக் கேள்விப்பட்டு தென்றல் ஊரெல்லாம் புரளி பேச, தேனீக்களோ மலர்தோறும் சென்று இந்த கிசுகிசுவைப் பரப்பிவிட ... அதன் பின்னர் இயற்கையில் நடக்கும் பலவற்றை கற்பனையில் வடித்து புனைந்துள்ளேன்.. இக்கவிதை தங்கள் பார்வைக்கு...

காலை இளம்பரிதி கண்டு
காதலில் மலர்ந்த குமுதம்

ஊரார் அறிய அலர்தூற்றி
உள்ளம் மகிழும் தென்றல்

சோலை நிறைந்த மலர்கள்
காதில் கதைசொல்லும் தேனீ

பாடி வரவேற்கும் குயில்கள்
ஆடல் அரங்கேற்றும் மயில்கள்

தாளம் இசைகூட்டும் மந்தி
தாவிக் குதித்தோடும் மான்கள்

வண்ணம் தீட்டிய வானம்
பொன்மஞ்சம் அமைத்த மேகம்!

கவிதை பாடிவரும் கரிவண்டு
கரம்கோர்த்து ஆடும் மலர்ச்செண்டு

மடியில் விழுந்த பனித்துளிகள்
மாலையாய் கோர்க்கும் புற்கொடிகள்

வளையல் பூட்டிய வானவில்
வளைத் தோரணம் அமைத்த கொன்றை

வெட்கித் தலைகுனியும் வாழை
வெண் நிலவைத் தேடிடுமே அல்லி!

மதிமறந்து உறங்கும் மாந்தர்
செவி புகுத்து தென்றல் சொல்லும்,

கழனி பூத்த தாமரைக்கும்
காலை எழும் கதிரொளிக்கும்

மாலை சூட்டி மகிழ்வதற்கு - நல்ல
வேளை ஒன்று வந்தது என்று! 

கவிஞர் : கோ.பார்த்தசாரதி

Comments

Popular posts from this blog

நட்சத்திரங்கள் - இது என் சிறுவயது முதல் கவிதை

நட்பின் இலக்கணம் கண்ணனும் குசேலனும்