நட்பின் இலக்கணம் கண்ணனும் குசேலனும்
ஆரியகுலத்தின் மேவிய செல்வன்
நேரிய வழியினன் நேர்மைக் குசேலன்
காரியவண்ணன் கருணை வள்ளல்
பாரின் வேந்தன் கண்ணனின் நண்பன்
சீரிய நட்பின் ஓவிய இலக்கணம்
பாரினில் வாழ்ந்திட இருவரும் வாழ்ந்தனர்
பாரினை விளக்கும் பகலவன் குலத்தின்
பண்பிற் சிறந்த பெரியோர் வாழிடம்
தோழர் இருவரும் தொழுதே கற்று
நேசக் கரங்களை நெருக்கிப் பிடித்தனர்
காலக் குதிரையோ கடிதாய் விரைந்தது
கல்விக் கடலின் கரைதனைக் கண்டனர்.
கருவிழியழவும் கைகள் நெகிழவும்
இருவர் மனத்திலும் ஏக்கப் பிரிவுகள்
ஆண்டுகள் கடந்ததும் மாண்டன நினைவுகள்
அருமைக் கண்ணனோ ஆயர் தம் வேந்தன்!
அந்தணன் குசேலனோ நொந்தனன் வாழ்வை
ஓட்டைக் குடிசையும் மனைவியும் மக்களும்
ஏக்க மனத்தினன் போக்கிடம் அறிந்திலன்
கண்ணனைக் கண்டு கனிந்திட எண்ணினான்
பொன்னொளி நிகர்த்த புவியின் வேந்தன்
வெள்ளைச் சிரிப்பில் முல்லையை வென்றவன்
வானவர் வாழ்த்திட வாழும் கண்ணனின்
துவாரகா புரிக்கு வந்தான் குசேலன்
நோக்கும் இடமெலாம் தேக்கும் வாழையும்
வானையும் எட்டும் வைக்கோற் குவியல்கள்
அன்புக் கண்ணனின் அரண்மனை தொட்டிட
எண்ணி எண்ணி நகர்த்தினான் கால்களை
வாயிற் காவலன் வந்து வணங்கி
யாது வேண்டும்? என்றே வினவ
கடிநகர் வேந்தன் கண்ணனைக் காண
குசேலன் வரவைக் கூறிடு என்றான்
நாழிகை மாண்டிட வாழ்வினில் வசந்தம்
கண்ணின் மணியெனக் கண்ணனைக் கண்டான்
இருவர் மனத்திலும் ஆயிரம் அசைவுகள்
ஓரக் கண்ணில் ஒழுகும் கண்ணீர்
ஒப்புமை இல்லை ஓவிய முத்து!
நேரிய கண்ணனும் நிலையினை மறந்தான்
நட்பின் பூசகன் ஆசனம் துறந்தான்
நடையில் விரைவுடன் நண்பனை யடைந்தான்
கட்டித் தழுவி சுற்றம் மறந்தான்.
ஆசனம் அளித்து பேசினான் பழங்கதை
அன்புடன் குசேலன் தந்த அவலை
ஆசையாய் அள்ளி உண்டான் கண்ணன்
நேசப் பிணைப்பில் நினைவுகள் மறந்தவன்
ஏழை நண்பன் நிலைதனை எண்ணி
தாங்கொணாத் துயரில் தவித்துப் பதறி
வாடிக் குமுறினான் வள்ளல் கண்ணன்!
அடுத்த கணமே ஆட்கள் பறந்தனர்
குசேலன் குடிலின் குறைகள் களைந்திட
கொடுத்து உயர்ந்தவன் கொடையில் சிறந்தவன்
நிலையில் திரியாத நிமிர்ந்த வாழ்வினன்
கார்முகில் வண்ணன் கண்ணனைப் போற்றி
துன்பம் ஒழிந்தான் தூய குசேலன்!

Comments
Post a Comment