உயிரே காதலில் உருகுதடி

என் இளம் பருவத்தில் காதல் கவிதைகளை எழுதிக் குவித்திருக்கிறேன்.. அனைத்தும் கற்பனையாய் எழுதப்பட்டவையே என எடுத்துச் சொன்னாலும் நம்பக்கூடியவர்கள் ஒருவரும் இல்லை. எவர் என்ன சொன்னால் என்ன ... எனது படைப்புகள் ஏட்டுச் சுரைக்காய்களாய் இருந்து செல்லரித்து போய் விட விரும்பவில்லை... இது ஒரு தலைவன் தலைவியிடம் கொண்ட காதலால் பிதற்றும் கவிதை...

முத்துக்கள் கோர்த்தது உன் சிரிப்பு
முத்தங்கள் கோர்த்திட எனக்குள் தவிப்பு 

சித்திரம் பேசும் உன் கண்கள்
நித்திரை மறந்தன என் விழிகள்

வருடாமல் வருடவந்த வாச மலரே - உனக்கு
வரவேற்புக் கோலமிட வானவில்லை அழைக்கின்றேன்.

மறுக்காமல் ஏற்றுக் கொள் என் 
மனமெனும் மலர்ச்செண்டை

நெருக்கமாய் கேட்டுப் பார் 
என் இதயத் துடிப்பில் உன் பெயர் கேட்பதை

வஞ்சித்து சென்று விட நான் 
உன் போல் வஞ்சியல்ல

நெஞ்சைத் திறந்து சொல்வேன் 
நினைவெல்லாம் நீதானென்று

வர்ணணை செய்ய வார்த்தைகளைத் தேடவில்லை
வரிகளை எழுத வைரங்களைத் தேடுகிறேன்

சங்கீதம் கற்றுக்கொள்கிறேன் நான் - ஆம்
கலகலக்கும் உன் காற்கொலுசைக் கேட்டுப்பார்!

படபடக்கும் உன் இமைகளைக் கேட்டுப் பார் !
பதிலளிக்கும் உன் இதழ்களைக் கேட்டுப் பார் !

சிங்கமாய் இருக்க விரும்புகிறேன் - ஆம்
உன் இதய சிம்மாசனத்தில்!

புலியாக இருக்க விரும்புகிறேன்-ஆம்
உன் புன்னகை வலையில்!

முள்ளாக இருக்க விரும்புகிறேன் - ஆம்
உன் கைக்கடிகாரத்தில்!

கல்லாக இருக்க விரும்புகிறேன் - ஆம்
உன் காது வளையங்களில் !

கவியாகவே காலமெல்லாம் இருக்க விரும்புகிறேன் - ஆம்
உன் காதல் இதயத்தில் !

Comments

Popular posts from this blog

நட்சத்திரங்கள் - இது என் சிறுவயது முதல் கவிதை

தாமரையின் காதல்

நட்பின் இலக்கணம் கண்ணனும் குசேலனும்