புத்தாயிரம் ஆண்டு 2000 உறுதிமொழி

புதிய புத்தாயிரம் ஆண்டு 2000 பிறந்தபோது மக்களிடத்தில் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி தாண்டவமாடியது. அது 21ம் நூற்றாண்டின் பிறப்பு என்பதுதான் சிறப்பு. மில்லென்னியம் ஆண்டு பிறப்பை மிக மிக உற்சாகமாக உலகமே கொண்டாடியது... அந்த குதூகல நினைவு இந்த தலைமுறை இளைஞர் நினைவில் ஒரு பசுமரத்தாணி எனலாம்...அந்த அனுபவம் அடுத்த நூற்றாண்டவருக்கு கிடைக்க போவதில்லை...
அந்த 2000 அண்டு பிறப்பன்று நம் இளையதலைமுறை ஏற்க வேண்டிய உறுதிமொழிகளை பட்டியலிடும் நோக்கிலும்...எனது இளநெஞ்சில் உதித்த கனவை நனவாக்கும் நோக்கிலும் அன்று இக்கவிதையை இயற்றினேன்.




விடிகாலை சூரியனை மடியிலேந்தி
விரிகடலின் அலைக்கரங்கள் ஆர்ப்பரிக்க;

வெள்ளிப்பனி இமயச் சிகரக் கூட்டம் 
வெண்மேக மென் தாடி தடவிப்பார்க்க;

குயிலோசை கேட்டு குமுதமலர் கண்திறக்க;
குளக்கரையில் தவளையெல்லாம் கும்மாளக் குதியலிட;

ஆயிரத்தில் ஒருமுறை அவனியில் பூக்கும்
'புத்தாயிரம் ஆண்டு' பூக்கிறது இன்று! 

பூவுலக நாடகத்தில் புதியதோர் அத்தியாயம்!
புறப்படுங்கள் இளைஞர்களே! போதும்  இங்கு அநியாயம்!

வறட்சி இதயத்து உலகோர்முன்னெ 
புரட்சியில் காண்போம் புதிய பாரதம்.

உதட்டளவு பேச்செல்லாம் ஒதுக்கிவிட்டு
மனதளவில் 'மதம்' கொள்ளா மனிதராவோம்

ஒடிந்துபோன மனிதநேய உணர்வுக்கெல்லாம்
மடியுமுன்னே வாழ்வளித்து மலரவைப்போம்.

காதலிக்கும் நேரத்தை பாதியாக்கி
கல்வியையும் சிறிதளவு காதலிப்போம்!

அரசியலைத் தூர்வாறி கயமை போக்கி
ஆட்டமில்லா நாற்காலி செய்துவைப்போம்.

புதுநாளில் புத்தாண்டில் புதுமை காண்போம்
புறப்படுங்கள் புதியதொரு உலகு செய்வோம்!

Comments

Popular posts from this blog

நட்சத்திரங்கள் - இது என் சிறுவயது முதல் கவிதை

தாமரையின் காதல்

நட்பின் இலக்கணம் கண்ணனும் குசேலனும்