இயற்கை எழில் மங்களூர்

ஒரு முறை பணி நிமித்தமாக மங்களூர் பயணித்த போது கண்டு வியந்த இயற்கை எழிலை வார்த்தைகளில் கோர்க்க முற்பட்டு எழுதியது தான் இந்த .. என் மனம் கவர்ந்த கவிதை ....


கொண்டல்தவழ் மலை முகடு
கொஞ்சும் எழில் காட்டாறு

வண்டு உலவும் பூக்காடு
வான் உதிர்க்கும் மழைமுத்து

சில்லென்றே பரவும் தென்றல்
சிலிர்த்து எழும் கிளை மரங்கள்

ஆர்ப்பரிக்கும் மலை அருவி
அழகு மிளிர் மலையரசி

காதல் கொண்டு மரங்கள் இங்கே
கருமேகம் தழுவும் விந்தை!

நாணம் கொண்ட குமரி யன்றோ?!
நனைந்து விழும் கொடியினங்கள் !

மாலை நேர கதிரொளியில்
மலையருவி பொன் போல் வீழும்.

அச்சமுற்ற புள்ளினங்கள்
அடைவதற்கு கூடு தேடும் !

செஞ்சேற்றில் திலகமிட்டு
செவ்வந்தி மலர்கள் சூடி

கொஞ்சும் எழில் பெண்டிர் போலே
குதித்தோடும் சிறு நதிகள்.

மண்ணுலகின் சொர்க்கம் என்றால்
மங்களூர் என்றே சொல்வேன்!

Comments

Popular posts from this blog

நட்சத்திரங்கள் - இது என் சிறுவயது முதல் கவிதை

தாமரையின் காதல்

நட்பின் இலக்கணம் கண்ணனும் குசேலனும்