தலைவன் வந்தான்

பூவிழித் தாரகை

பூண்டது நித்திரை

பூம்பொழில் சிலிர்த்து

பூமணம் நிறைக்க

நாழிகை நகர்கையில்

நல்லதோர் கவிதை

மெல்லிசை பின்வர

மென்மையாய் இனித்தது

ஏழிசைப் பெண்குயில்

ஏக்கமாய்க் கூவிட

வானெழும் சூரியன்

வதனப் பார்வையில்

கானகம் நிறைத்த

காரிருள் நாயகி

நளினச் சிரிப்புடன்

நாணமாய் விலகினாள்.

குவளை பூத்த

குளக்கரைப் படியினில்

கவலை பூண்டு

காதலி நானழ

தேதமிழ்த் தலைவன்

தேடினான் இல்லையோ?

வருதல் உரைத்து

மாறுதல் ஏனோ?

முல்லைச் சிரிப்பின்

முகவரி தொலைந்ததோ?

கொவ்வை இதழ்கள்

வெம்மை ஈந்ததோ?

குழலும் யாழும்

குரலினும் இனித்ததோ?

கோலக் கருவிழி

கொஞ்சுதல் கசந்ததோ?

நிகழும் யாவும்

நினைவினில் இல்லையோ?

ஏனோ தலைவன்

என்திசை வந்திலன்?

நெஞ்சம் நஞ்சென 

நெருடும் வேளையில்

வேங்கைப் பாய்ச்சலில்

வெண்ணிறப் புரவியில்

செந்நிறச் சூரியன்

செங்கடல் எழுகையில்

ஆத்தி மாலை

அணிசெய் மார்பில்

முத்தின் வகையென

பூத்திடும் வியர்வையில்

முத்துச் சிரிப்பின்

முகவரி கண்டு

எந்தன் நாயகன்

என்னிடம் வந்தான்

’அன்பே’ என்றவன்

ஆசை மொழிகள்

பண்பாய் என்னுள்

பரவிக் களிக்க

பொன்மன நாயகன்

மென்மையாய் கலங்கிட

பொய்ச்சினம் கொண்டு

பாய்ச்சினேன் மலர்க்கணை.

’கண்மை கலைய 

காரிகை நான் அழ

மன்மதர் நீரோ

மறந்தது ஏனோ?

வின்னக மகளிர்

நின்னகம் வந்தரோ?’

என்னவர் கலங்கி

பின்னுறத் தழுவி

'தண்ணெழில் நாயகி

தாமரைக் கண்ணகி

வின்னக மகளிர்

உன்னிலும் அழகோ?

பொற்சிலை வடிவே

பொய்ச்சொல் ஏனடி?

மஞ்சள் நிலவே

மதுரத் தமிழே

வாட்டுதல் போதும்

வந்திடு’ என்றார்.

நேரம் கழிவதே

நினைவினில் இல்லை.

குளக்கரைப் படியில்

கோமகன் மடியில்

தூக்கம் மறந்து 

துவளும் விழிகள்

மயக்கம் கொடுக்க

தயக்கம் துறந்தேன்

தென்திசைத் தென்றல்

தேன்மழை சொரிய

வலசை வந்திடும்

வண்டிசை கேட்டு

கணமதில் இருவரும்

கண்ணயர்ந் திருந்தோம்

திடுமென என்னுடல்

திசைகளை மறந்திட

படிகளில் உருண்டு

பாற்குளம் மூழ்கவே 

அஞ்சிப் பதறி

வஞ்சி நான் விழித்திட

கண்டது யாவும்

கனவெனப் புரிந்தது.



Comments

Popular posts from this blog

நட்சத்திரங்கள் - இது என் சிறுவயது முதல் கவிதை

தாமரையின் காதல்

நட்பின் இலக்கணம் கண்ணனும் குசேலனும்