தமிழ்த் தாய் வாழ்த்து

பொதிகை மலை உகுத்த
பொன்னுருக்கு எழிலருவி;

வைகை வாழ் நாட்டில்
வளர்ந்திட்ட இளங்குமரி;

குள்ள மா முனிவன்
குடில் பெற்ற அருட்செல்வி;

குடகுமலைக் காவிரியில்
குதித்தாடும் பைங்குமரி;

செம்மையுரை வள்ளுவரின்
செந்நாக்கு பேசும் மொழி;

வள்ளல் கடையெழுவர்
வாழ்வித்த உயிர் மூச்சு;

தொட்டில் இளங் குழந்தை
துயிலூட்டும் தாலாட்டு;

நளினக் காற்சதங்கை
நடைமாற்றும் இசைக்கூத்து;

எழிலொழுக ஒவியத்தில்
எழுதுவித்த குயிற்பாட்டு;

நாற்று நடும் உழத்தியரின்
நாவளைத்த இசைப்பாட்டு;

குதித்தோடும் காவிரியின்
குற்றாலக் குளிர்சாரல்;

திகட்டாத நறும்பூக்கள்
தேடிவந்த தேன்தென்றல்;

பகட்டாக வானெழுந்த
பல்வண்ணப் பட்டாம்பூச்சி;

ஔவை மூதரசி
அணிந்திருந்த பொன்மகுடம்;

பாட்டரசன் பாரதி
மீட்டுவித்த நல்வீணை;

கட்டுத் தறி கூட
கனிவாய் பேசும் கவிதை;

தமிழ்-
மெல்லியல்பில் இளங்குமுதம்
மேன்மையிலே நல்லமுதம்
உயர்சிறப்பில் பனி இமயம்- உயர்வுக்கு
உயிரே ஈந்தாலும் தகும்!


Comments

Post a Comment

Popular posts from this blog

நட்சத்திரங்கள் - இது என் சிறுவயது முதல் கவிதை

உயிரே காதலில் உருகுதடி

தாமரையின் காதல்