சாய் குறள் மாலை


1.
சாய்நாமம் போற்றிப் புகழ்ந்து வணங்கியோர்
நோயின்றி எய்துவர் நூறு.
2.
சாய்பாதம் பற்றியோர் பெற்ற புகழனைத்தும்
துய்யவாழ்வில் நிற்கும் துணை.
3.
கருணைக் கரசராம் சாய்மகான் போற்றி
பெருமை ஏற்கும் உலகு.
4.
சாய்யின் வடிவம் அகத்தே பொதிந்தார்கு
மாயை வெறுக்கும் மனது.
5.
ஏழை வடிவத்து வள்ளல் வழங்குவார்
ஏந்தும் கரங்களில் உய்வு.
6.
நெஞ்சத்துத் தூயவர் சாய்மடி சேர்ந்தார்க்கு
பஞ்சம் அகலுமே காண்.
7.
வெஞ்சினம் வென்றவர் சாய்வழி நின்றவர்
நெஞ்சம் அடையும் உயர்வு.
8.
வறியோர் பசியும் வருத்தும் பிணியும்
நொடிக்குள் மறைத்தவர் சாய்.
9.
சாய்கழல் பற்றினார் சீரடி சேர்ந்தார்க்கு
நோய்நொடி என்றும் இல.
10.
வான்மழை ஓங்கி வளமை பெருக்குமே
நான்மறை சாய்தொழும் நாடு.
11.
சீரடி பெற்றசீர் சித்தராம் சாய்மகான்
சீர்மிகு மானிடர் பேறு.
12.
கார்முகில் வந்து கழனி சிறக்குமாம்
சீர்வளர் சாய்நல் வரவு.
13.
வாய்மை  எளிமை எளியோர்க் கருள்செயும்
சாய்யருள் பூசனை நன்று.
14.
சாய்முகம் காணவே ஏங்கும் அடியவர்
தாய்முகம் கண்ட மகவு.
15.
காணும் பொருளில் பலவுருத் தோற்றமாய்க்
காட்சி தருபவர் சாய்.
16.
மாதவச் சித்தராம் சாய்யுயர்க் கற்பகம்
ஆதவன் அன்ன விளக்கு.
17.
சாய்நெறி போற்றி மதவெறி மாய்த்தால்
சமத்துவம் காணும் உலகு.
18.
பூசனை செய்துசாய் பொற்பதம் பற்றினால்
மாசறு பொன்னாம் மனது.
19.
மாமறை போற்றும் மனத்துறை சாய்யருள்
தாமரை பூத்த வனப்பு.
20.
நினைத்த பொழுதில் நிகழ்தி அருளி
அனைத்துமே ஆனவர் சாய்.
21.
சூழும் அடியவர்க் கூறும் குறைகள்
சுவடையே மாற்றுவார் சாய்.
22.
சாய்வழி வாழும் அடியோர்த் திருவடிச்
சார்ந்தோர்க்கு  அஞ்சிடும் தீது.
23.
சேய்வரம் வேண்டியே சாய்கழல் சேர்ந்தோர்க்கு
தாய்மனம் நல்கும் வரம்.
24.
குருவருள் வேண்டிக் குவியும் அடியார்த்
திருவுளத் தேடலே சாய்.
25.
சாவடி வாழ்ந்திடும் சாய்யிடம் முறையிட
மாவடி மாற்றிடும் வாழ்வு .
26.
அஞ்சுதல் விட்டு அறவழி போற்றினால்
நெஞ்சில் நிறைவரே சாய்.
27.
வதனப் பொலிவும் இதயத்  தெளிவும்
இதமருள் சாய்தரும் சீர்.
28.
நிமிர்ந்த புகழும் நிலைத்த சிறப்பும்
நிறைந்து அருள்வரே சாய்.
29.
இளையோர்  முதியோர் தொடரும் அடியார்
இதயத்து நண்பனே சாய்.
30.
எளிமை உருவாய் எளியோர்த் திருவாய்
எங்கும் நிறைந்தவர் சாய்.
31.
பிணியும் வினையும் பகையும் தொலைக்கும்
அணிதரு சாய்த்திரு நீறு.
32.
கனிவும்  தெளிவும் பரிவும் பணிவும் 
முனிவராம் சாய்நல் வடிவு.
33.
சாய்மகான் சொல்வழி செல்லும் அடியாரைச்
சார்ந்தே சுழலும் உலகு.
34.
வேம்பின் நிழலில் ஒளிர்ந்துயர் சாய்மகான்
வேந்தரும் ஏந்தும் இறை.
35.
பசியென வந்தோர்க்குக் கைகளால் ஈந்தருள்
பாசத்தாய் வள்ளலே சாய்.
36.
அருள்மனத் தூயவர் அன்பேசாய் என்றுணர்
அன்பர்க்கு நேராது தாழ்வு.
37.
செந்தழல் போற்றுவார் மும்மலம் மாற்றுவார்
மாந்தர் மனத்துறை சாய்.
38.
சாய்ராம் தவம்செய் புனிதத் துவாரகாமாய்
வாயில் தொழுதல் வரம்.
39.
தாய்மடி வந்து துயில்செய் குழவிபோல்
சாய்யடி சேரும் மனம்.
40.
ஓங்காரத் தோற்றம் ஒளிரும் அருட்தேகம்
எங்கெங்கும் சாய்நாதர் எழில்.
41.
சித்தம் ஒருமித்துச் சாய்சித்தர்  காண்பவர்
நித்தம் அடைவார் நிறைவு.
42.
அன்புடை நெஞ்சத்தார் நோன்புசெய் சான்றோர் 
அழைக்கவும் தோன்றுவார் சாய்.
43.
வெண்மை அணிந்தவர் வேதம் உரைத்தவர்
வேந்தர்சாய் அன்பே துணை.
44.
கவலை விடுத்துக் கடமையைச் செய்யெனக்
கட்டளை இட்டவர் சாய்.
45.
தொடரும் துணையாய் துணைவரும் சாய்ராம்
துணைவர இல்லை துயர்.
46.
மலரடி பற்றி மனக்குறை செப்பினால்
மாற்றும் நிறைசாய் அருள்.
47.
நிறைமதி மாந்தர் இருகரம் ஏந்த
நிறைபொருள் நல்குவார் சாய். 

48. சிந்தை நிறைந்தநல் சேய்குணத்து அன்பர்பால்
வந்து உறைபவர் சாய்.

49. அருட்திரு செல்வம் அனைத்துயிர் வேந்தன்
தவத்திரு தந்தையே சாய்.

Comments

Popular posts from this blog

நட்சத்திரங்கள் - இது என் சிறுவயது முதல் கவிதை

உயிரே காதலில் உருகுதடி

தாமரையின் காதல்