Posts

தூண்டிலிடும் உன்விழிகள்

Image
நெற்கதிரின் குனிவை கண்டேன் நின் முகத்தில் நாணம் கண்டேன்! விற்போரில் வீரம் கொண்டேன் விழிவீச்சில் தூரம் நின்றேன்! முத்துக்கள் மாலை என்றேன் முல்லையவள் சிரிக்கக் கண்டேன்! கிள்ளை குயில் மொழிகள் என்றேன் கீதைமொழி உன்னதென்று கிறங்கி நின்றேன்! அன்னம் நடைபயில ஆசை கொண்டேன் அடியொற்றும் நடை உனதா? ஆவல்கொண்டேன்! நாணயங்கள் சிதறுகின்ற ஓசைகேட்டும் நாணமகள் கைவளையள் ஓசையென்றேன்! மலர் வனத்தில் பூக்கள் எல்லாம் மலர்ச்சிகொள்ள மங்கையவள் சேலையென மயக்கம் கொண்டேன்! வண்ணநிலா வானெழுந்து மயக்கக்கண்டேன் பொன்மகளே உன்வதனப் பொலிவுகண்டேன்! புல்மடியில் பனித்துளிகள் பூக்கக் கண்டேன் உன்னிமையில் பூத்திருக்கும் வியர்வை கண்டேன்! செவ்வானம் கீழ்க்கடலில் புலரக்கண்டேன் செம்மலரே உன்சிவந்த முகமே கண்டன்! தூண்டிலிலே சிக்கிவிடும் மீன்கள் கண்டேன் தூண்டிலிடும் உன்விழியில் சிக்கிக்கொண்டேன்!

மருந்தாளும் வேந்தர் தினம் 25th September

Image
பிணி நீக்கும் பணி ஏற்றோம் வினை தீர்க்கும் வித்தை கற்றோம் நஞ்சையும் அமிழ்தாக்கி நலம் செய்தோம் உயிர்காக்கும் மருத்துவரின் உற்றதுணை நாமானோம். முப்பொழுதும் திறந்திருக்கும் மருந்தகமும் நமதே! மருந்துச்சீட்டு தலையெழுத்தின் விடையறிவோம் நாமே! மருத்துவர்கள் அறியாத  கிராமத்து வைத்தியரும் நாமே! மருந்துசெய் கெடுவிளைவை புரிந்துசொல்லும் பிரம்மா நாமே! எப்போதும் மக்கள்பணி இறைபணியாய் முன்நிற்கும் மனிதகுலம் காக்கும் புனித குலம் நமதன்றோ!

தமிழ்த் தாய் வாழ்த்து

Image
பொதிகை மலை உகுத்த பொன்னுருக்கு எழிலருவி; வைகை வாழ் நாட்டில் வளர்ந்திட்ட இளங்குமரி; குள்ள மா முனிவன் குடில் பெற்ற அருட்செல்வி; குடகுமலைக் காவிரியில் குதித்தாடும் பைங்குமரி; செம்மையுரை வள்ளுவரின் செந்நாக்கு பேசும் மொழி; வள்ளல் கடையெழுவர் வாழ்வித்த உயிர் மூச்சு; தொட்டில் இளங் குழந்தை துயிலூட்டும் தாலாட்டு; நளினக் காற்சதங்கை நடைமாற்றும் இசைக்கூத்து; எழிலொழுக ஒவியத்தில் எழுதுவித்த குயிற்பாட்டு; நாற்று நடும் உழத்தியரின் நாவளைத்த இசைப்பாட்டு; குதித்தோடும் காவிரியின் குற்றாலக் குளிர்சாரல்; திகட்டாத நறும்பூக்கள் தேடிவந்த தேன்தென்றல்; பகட்டாக வானெழுந்த பல்வண்ணப் பட்டாம்பூச்சி; ஔவை மூதரசி அணிந்திருந்த பொன்மகுடம்; பாட்டரசன் பாரதி மீட்டுவித்த நல்வீணை; கட்டுத் தறி கூட கனிவாய் பேசும் கவிதை; தமிழ்- மெல்லியல்பில் இளங்குமுதம் மேன்மையிலே நல்லமுதம் உயர்சிறப்பில் பனி இமயம்- உயர்வுக்கு உயிரே ஈந்தாலும் தகும்!

தலைவன் வந்தான்

Image
பூவிழித் தாரகை பூண்டது நித்திரை பூம்பொழில் சிலிர்த்து பூமணம் நிறைக்க நாழிகை நகர்கையில் நல்லதோர் கவிதை மெல்லிசை பின்வர மென்மையாய் இனித்தது ஏழிசைப் பெண்குயில் ஏக்கமாய்க் கூவிட வானெழும் சூரியன் வதனப் பார்வையில் கானகம் நிறைத்த காரிருள் நாயகி நளினச் சிரிப்புடன் நாணமாய் விலகினாள். குவளை பூத்த குளக்கரைப் படியினில் கவலை பூண்டு காதலி நானழ தேதமிழ்த் தலைவன் தேடினான் இல்லையோ? வருதல் உரைத்து மாறுதல் ஏனோ? முல்லைச் சிரிப்பின் முகவரி தொலைந்ததோ? கொவ்வை இதழ்கள் வெம்மை ஈந்ததோ? குழலும் யாழும் குரலினும் இனித்ததோ? கோலக் கருவிழி கொஞ்சுதல் கசந்ததோ? நிகழும் யாவும் நினைவினில் இல்லையோ? ஏனோ தலைவன் என்திசை வந்திலன்? நெஞ்சம் நஞ்சென  நெருடும் வேளையில் வேங்கைப் பாய்ச்சலில் வெண்ணிறப் புரவியில் செந்நிறச் சூரியன் செங்கடல் எழுகையில் ஆத்தி மாலை அணிசெய் மார்பில் முத்தின் வகையென பூத்திடும் வியர்வையில் முத்துச் சிரிப்பின் முகவரி கண்டு எந்தன் நாயகன் என்னிடம் வந்தான் ’அன...

நாகை தேசிய மேல்நிலைப் பள்ளி

Image
  தேசிய மேல்நிலைப்பள்ளி- நான் பூசிக்கும் கோயிலன்றோ?! கல்விக் கண்திறந்த சான்றோர் நல்லறம் நடத்திய மன்ற மன்றோ?! காலம் தவறாமைக்குத் தமிழாசான் விஸ்வநாதன்(TV) தலைமைப் பண்புக்கு தங்கநிகர் இராமசீனிவாசன்(HM Sir) வேதியல் வித்தகர் வேந்தர்நிகர் இராமசாமி(LR) இயற்பியலின் தந்தை இன்முகமாய் தியாகராஜன்(VT) கணிதப் புலியன்றோ?! கம்பீர விஜயராஜ்(RVR) கலைஇலக்கியப் பேரொளி கடமைதவறா பத்மா அம்மையார்  அன்னை தமிழுக்கு அணிசேர்த்த மாமன்னர் மீனவன் கரைகாணா மாணவர்க்கு கரம் கொடுத்த துவாரகைக் கண்ணன் (RTK) சொந்தப் பிள்ளை போல சொல்லிக் கொடுப்பாரே காந்திமதி தாயார்! எண்ணிலடங்கா வேந்தர்கள் எண்ணங்களில் சிம்மாசனமிட்ட நன்நாகை நகர் பெற்ற பொற்கோயில் அன்றோ எம்பள்ளி! அந்நாளை நினைத்து ஏங்கி அனுதினமும் தேடுகின்றேன் நான்பெற்ற செல்வங்கள் நல்லதொரு கல்விகாண! கொட்டிக் கொடுத்தாலும் கிடைப்பதில்லை கோவேந்தர் கொடுத்த கல்வி! வையத்தில் வாழ்வுதந்த வேந்தே! வணங்க வேண்டும் உம் கால்கள் எங்கே?! கோ. பார்த்தசாரதி

அத்திவரதர்

Image
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஒரு அதிசய நிகழ்வாக அத்திவரதர் எழுந்தருளும் வைபவம் இந்த ஆண்டு நிகழ்திருக்கிறது. வரதராஜ பெருமாள் கோயிலின் அனந்தசரஸ் திருக்குள நீருக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டு 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை 48 நாட்களுக்கு மட்டும் வழிபடப்பட்டு மீண்டும் திருக்குள நீரில் மூழ்கிவைக்கப்படும் அதிசயம் இப்போது நம் அனைவருக்கும் தெரியவந்திருக்கிறது. மேலும் இந்த அத்திவரதர் அத்திமரத்தால் வடிக்கப்பட்டவர் என்பது கூடுதல் சிறப்பு. இந்த நூற்றாண்டு கடந்த வைபவம் பிரதமர், ஜனாதிபதி தொடங்கி அனைத்து மாநிலத்தவரையும் ஈர்த்து குறுகிய காலத்தில் பெரும் கவனம் பெற்றது நம்மை ஆச்சர்யப்படவைக்கும் அற்புத நிகழ்வே! இதற்குமுன் 1854, 1892, 1937, 1979 ம் ஆண்டுகளில் அத்திவரதர் எழுந்தருளும் வைபவம் நடந்திருக்கிறது. இந்த ஆண்டும் 1-7-2019 முதல் 17-8-2019 வரை நடைபெற்று நிறைவுற்றிருக்கிறது. ஆத்திவரதர் என்னை ஆட்கொண்டு தனது நிறைவு நாளில் ஒரு பாமாலை சூட்ட என் உள்ளத்தில் பணித்ததால் இக்கவிதையை சிரமேற்கொண்டு எழுதிபரவசமுற்றேன். கலியுக வரதனே காஞ்சியின் வரதனோ! தடாகம் பூத்தெழுந்த தாமரை மணாளனோ! வராது வந்த மாமணியே...

நட்பின் இலக்கணம் கண்ணனும் குசேலனும்

Image
ஆரியகுலத்தின் மேவிய செல்வன் நேரிய வழியினன் நேர்மைக் குசேலன் காரியவண்ணன் கருணை வள்ளல் பாரின் வேந்தன் கண்ணனின் நண்பன் சீரிய நட்பின் ஓவிய இலக்கணம் பாரினில் வாழ்ந்திட இருவரும் வாழ்ந்தனர் பாரினை விளக்கும் பகலவன் குலத்தின் பண்பிற் சிறந்த பெரியோர் வாழிடம் தோழர் இருவரும் தொழுதே கற்று நேசக் கரங்களை நெருக்கிப் பிடித்தனர் காலக் குதிரையோ கடிதாய் விரைந்தது கல்விக் கடலின் கரைதனைக் கண்டனர். கருவிழியழவும் கைகள் நெகிழவும் இருவர் மனத்திலும் ஏக்கப் பிரிவுகள் ஆண்டுகள் கடந்ததும் மாண்டன நினைவுகள் அருமைக் கண்ணனோ ஆயர் தம் வேந்தன்! அந்தணன் குசேலனோ நொந்தனன் வாழ்வை ஓட்டைக் குடிசையும் மனைவியும் மக்களும் ஏக்க மனத்தினன் போக்கிடம் அறிந்திலன் கண்ணனைக் கண்டு கனிந்திட எண்ணினான் பொன்னொளி நிகர்த்த புவியின் வேந்தன் வெள்ளைச் சிரிப்பில் முல்லையை வென்றவன் வானவர் வாழ்த்திட வாழும் கண்ணனின் துவாரகா புரிக்கு வந்தான் குசேலன் நோக்கும் இடமெலாம் தேக்கும் வாழையும் வானையும் எட்டும் வைக்கோற் குவியல்கள் அன்புக் கண்ணனின் அரண்மனை தொட்டிட எண்ணி எண்ணி நகர்த்தினான் கால்களை வாயிற் கா...