Posts

தத்துவ வடிவே வினாயகா

Image
ஆனை வடிவில் ஆழ்ந்தநல் தெளிவும் பானை வயிற்றில் பயின்ற பொறுமையும் கூரிய விழிகளில் குவிந்த மனமும் அகன்ற செவியில் அனைத்து அறிவும் ஒற்றைக் கொம்புபோல் ஏற்றதைத் தேர்ந்து நீண்ட துதிக்கையில் வேண்டிய சுற்றமும் அங்குசக் கரங்கள் ஐம்புலம் அடக்கவும் அடங்கிய எலிபோல் ஆசைகள் ஒடுங்கவும் அபயக் கரங்கள் அடைக்கலம் தந்திட தேன்சுவை மோதகம் தேடிய வரமாய் வானவர் வாழ்த்தி வையகம் வாழ கழல்கள் பற்றி தொழுதவர் துணைவரும் அழகிய களிறே! அற்புதத் திருவே! எளியவர் இறையே! என்றும்என் துணையே! கற்பகத் தருவே! பொற்பதம் பணிந்தேன்!

சுதந்திரம் நமக்கு நிரந்தரம்

Image
 விடிகாலைப் பொழுது இங்கு விடிவெள்ளி முளைத் தெழுந்து இனிதாகக் குயில் இசையில் இழைந்தோடி தென்றல் வர இதுவரையில் இருந்த இருள் இனி இங்கு நிலைபெறுமோ?! தொடுவானம் சிவந் தெழுந்து துளிர்க்கிறதே புதுக் கனவு இனி ஒருநாளும் துன்பமில்லை ஒழிந்திடுமே சூழும் தொல்லை துயில் களைந்து எழுமனமே! துணிவே நம் துணைவருமே! அன்று பிறந்த சுதந்திரம் என்றும் நமக்கு நிரந்தரமே! பிறநாட்டு பொருள் எதற்கு? திறம் வளர்த்து உருவாக்கு உழுது உண்ணும் விவசாயம் தொழுது உயர்த்தும் வழிதேடு தடம்மாறும் இளைஞர் கூட்டம் தரம் உயர்த்தி வேலைகொடு மதமாயப் பூசல் எல்லாம் மனிதர்க்கு வேண்டாம், கேடு! இந்தியக் கல்வித் தரமே இனி உலகின் தரமென்றாக்கு பாரதப் புதல்வரே இனி பாரின் வேந்தர் என்றாக்கு. துயில் களைந்து எழுமனமே! துணிவே நம் துணைவருமே! அன்று பிறந்த சுதந்திரம் என்றும் நமக்கு நிரந்தரமே!

கொரோனா- இதுவும் மாறும் நிலை வரும்!

Image
COVID 19 NOVEL CORONA VIRUS நோய் சீனாவின் ஊஹான் மாநிலத்தில் பரவத் தொடங்கி பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று உலகெங்கும் பரவத் தொடங்கி உலகையே அச்சுறுத்தி  இப்போது இந்தியாவில் ஆயிரம் பேருக்கு பரவி வீடுகளில் அனைவரும் அடைபட்டுக் கிடக்கும் நேரத்தில் எழுதப்பட்ட என் கவிதை மண்ணில் இந்த மனிதனே மன்னன் என்ற நினைப்பு தான் மண்ணைக் கவ்வும் நிலைமையும் எண்ணிப் பார்த்த தில்லையே! கண்ணில் காணா கொரோனா கனவில் வந்து கொல்லுதே வானம்பாடி வாழ்க்கையோ வாசல் கதவில் முட்டுதே வாசம் நுகர்ந்த நாசியை விஷமாய் வைரஸ் நெருங்குதே! அனைத்தும் அறிந்த மனிதனை அறியாமல் பற்றித் தொடருதே ! கைகளைத் தொட்ட நண்பன் கழுத்தைப் பற்றும் காலனாம்! இருமலில் பரவும் நோய்தான் இதுவரை வந்ததில் கொடியதாம் அரசனும் ஆண்டியும் இன்று அடைபட்டுக் கிடக்கிறார் நொந்து அகந்தையில் அழித்தது கொஞ்சமா? அடக்கி ஆளுதே கொரோனா! முகத்தை மூடி ஒளிகையில் முதுகுக்குப் பின்னால் சிரிக்குதே! காலம் கடத்தாது அடங்குக! கதவுகள் அடைத்து முடங்குக! அடைபட்டு வாழ்வது ஒன்றே தடைபட்டு பரவுதல் நிறுத்தும் இருப்பதை வைத்து வாழவும்; இன்பம் எதுவென உ...

கொரோனா ஒழியும்!

Image
COVID 19 NOVEL CORONA VIRUS நோய் சீனாவின் ஊஹான் மாநிலத்தில் பரவத் தொடங்கி பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று உலகெங்கும் பரவத் தொடங்கி உலகையே அச்சுறுத்திய நேரத்தில் எழுதப்பட்ட என் கவிதை கொரோனா ஒழியும் மனிதா! கொள்ளைநோய் நமக்கு புதிதா? மரணத்தை வெல்வோம் எழுந்துவா மாற்றம் காணட்டும் இந்தியா! இருமலும் தும்மலும் கேடு உடனே முகத்தை மூடு இருகரம் கூப்பி வணங்கு இடையிடை கைகளைக் கழுவு பொதுவில் இருமினால் பரவும் பொறுப்புடன் தூய்மையைப் பேணு குடிப்பதால் ஒழியாது கொரோனா குசும்புக்கு இதுதான் நேரமா? முகத்தில் கவசம் மாட்டு அகத்தில் துணிவே மருந்து! காய்ச்சலும் இருமலும் இருந்தால் அலட்சியம் செய்யாதே நண்பா! மருத்துவ மனைதனில் அடங்கு தெருக்களில் திரியாமல் முடங்கு. பொதுநலம் ஒன்றே மருந்து தனிநபர் ஒழுங்கே தீர்வு ! பொதுவில் உமிழ்தல் தவறு போதும் தவறை உணரு! பலரும் தொட்ட பொருளில் பலநாள் வாழுமாம் கிருமி! கண்ணும் மூக்கும் வாயும் கைகளால் தொடுவதால் நோயாம் ! மனிதனை மாய்க்கும் எதிரி கண்ணுக்கு தெரியாத கிருமி! எத்தனை வந்தால் என்ன ஏழாம் அறிவால் வெல்வோம்!

தஞ்சை கோயில் குடமுழுக்கு விழா 2020

Image
The ‘kumbhabhishekam’ (consecration) of the 1,010-year-old Thanjavur Sri Brihadeeswarar Temple or the Big Temple, built by emperor Rajaraja Chola I (985 CE -1015 CE)  on tomorrow 5-2-2020. அடியார் மனத்தகத்து எழுந்த ஒளிச்சுடர்  மாணிக்கக்  கதிரே! முடிமேல் குளிர் கங்கைசூடி முடியும்அடியும் முடிவிலா வடிவே! அனைத்திலும் உயிராய் உறைந்து  நினைத்ததும் வந்த நிறைவே! வினைத்துயர் தீர்க்க வந்த விடிவெள்ளி யன்ன விளக்கே! இறைத்தமிழ் மணக்கும் தஞ்சை இராஜராஜ சோழீச்வரச் சுடரே! இருகரம் கூப்பும் அடியார் இதயத் துயர்தீர் மருந்தே! பெருவுடையார் எனப் போற்றிப் பெருமைகொள் தமிழர் மரபே! இமயச் சிகரம் தொட்டுயரும் நமச்சிவாய நாதத் திருவே! குன்றென உயர்ந்த நின்கோயில் குடமுழுக்கில் குளிரும் அடியார் எழில்மனமே! கோ. பார்த்தசாரதி

சாய் குறள் மாலை

Image
1. சாய்நாமம் போற்றிப் புகழ்ந்து வணங்கியோர் நோயின்றி எய்துவர் நூறு. 2. சாய்பாதம் பற்றியோர் பெற்ற புகழனைத்தும் துய்யவாழ்வில் நிற்கும் துணை. 3. கருணைக் கரசராம் சாய்மகான் போற்றி பெருமை ஏற்கும் உலகு. 4. சாய்யின் வடிவம் அகத்தே பொதிந்தார்கு மாயை வெறுக்கும் மனது. 5. ஏழை வடிவத்து வள்ளல் வழங்குவார் ஏந்தும் கரங்களில் உய்வு. 6. நெஞ்சத்துத் தூயவர் சாய்மடி சேர்ந்தார்க்கு பஞ்சம் அகலுமே காண். 7. வெஞ்சினம் வென்றவர் சாய்வழி நின்றவர் நெஞ்சம் அடையும் உயர்வு. 8. வறியோர் பசியும் வருத்தும் பிணியும் நொடிக்குள் மறைத்தவர் சாய். 9. சாய்கழல் பற்றினார் சீரடி சேர்ந்தார்க்கு நோய்நொடி என்றும் இல. 10. வான்மழை ஓங்கி வளமை பெருக்குமே நான்மறை சாய்தொழும் நாடு. 11. சீரடி பெற்றசீர் சித்தராம் சாய்மகான் சீர்மிகு மானிடர் பேறு. 12. கார்முகில் வந்து கழனி சிறக்குமாம் சீர்வளர் சாய்நல் வரவு. 13. வாய்மை  எளிமை எளியோர்க் கருள்செயும் சாய்யருள் பூசனை நன்று. 14. சாய்முகம் காணவே ஏங்கும் அடியவர் தாய்முகம் கண்ட மகவு. 15. காணும் பொருளில் பலவுருத் தோற்றமாய்க் காட்சி தருபவர் சாய். 16. மாதவச...

பூங்கா வாழ்க்கை

Image
மரங்கள் அடர்ந்த சோலையில் மண்டிக் களிக்கும் மழலைகள்! விடுமுறை வந்ததால் வசந்தம், பாடங்கள் மறந்த பரவசம்! புல்மடி உறங்கும் பெரியோர்; புகலிடம் தேடும் முதியோர்; கவலைகள் மறந்த குடும்பம் கடமைகள் இருந்தும் கூடும்! பறவைகள் போலே யாவரும் பாடித் திரிவதே ஒருசுகம்! இருவர் மட்டுமே உலகில் இருப்பது போன்றோர் நினைப்பில் காதலர் நடத்திடும் குறும்போ கலைஎழில் நிழற்பட விருந்து! பொங்கும் அழகுப் பூவினம் பெங்களூர் தோட்டத்து இரத்தினம்! பரந்து, விரிந்து, மனம்போல் பசுமை விரிக்கும் மரங்கள்!- அவை பணிச்சுமை வளைத்த முதுகை பஞ்சணை ஏந்தும் தாய்தான்! இயற்கையின் மடியில் ஒன்றாய் இன்பமாய்க் கூடும் மாந்தரோ தொந்தியைக் குறைக்கவும் ஓடுவார்; நொந்ததை மறக்கவும் நாடுவார்; அடுக்கு மாடிக் கூட்டுக்குள் அடைபட்டு வெந்தவர் கூடுவார். செங்கதிர் வெயிலில் வாடியோர் சிந்தனை மறந்தே தூங்குவார். மந்திரப் புன்னகை இயற்கை-ஆம் மாறக்குமே இயந்திர வாழ்க்கை!

இந்தியத் தலைமகன் காந்தி மகான்

Image
பொன்னுருக்கு எழில் வானம் பூத்திருக்கும் தென்புலத்துத் தேன் தென்றல் தாலாட்டும்! வெண்ணிறத்து பனிமகுடம் இமயம் சூடும் கண்ணுறங்க கடல் அலைகள் கவிதைபாடும் இன்முகத்து எழில் அன்னை பாரதத்தின் பொன் வயிற்று நன்மகன்தான் புனித காந்தி! நன்னெறியும் நாணயமும் நல்வாழ்வும் பொன் பொருளும் புகழ் சிறப்பும் நல்லறிவும் இந்நிலத்தின் பெருமை என உலகறிய இங்கிலாந்து கள்வருக்கோ வயிற்றெரிவு! மானமுயர் பாரதத்தை அடிமை கொண்டு மக்களெலாம் மாடுகள் போல் வாழவைத்தார். வழக்காடி பொருளீட்ட வந்த காந்தி  வாழ்வியலை மாற்றியதே இனவெறி தான் இனவெறியன் அன்றொருநாள் உதைத்த உதை, இந்தியரின் சுதந்திரத்தின் விதைதான் போலும்! தம்மக்கள் நலம் பேணும் நோக்கம்விட்டு- காந்தி தாய் நாட்டின் தாழ்வுதனை போக்க வந்தார் எந்நாளும் வாய்மையே வெல்லும் என்று உண்ணா நோன்பிருந்து உரக்கச் சொன்னார். துணிந்து எதிர்த்த வீரர் எல்லாம் துப்பாக்கி குண்டுகளை ஏந்தி வீழ வெற்றுடம்பு காந்தி மகான் முன்னே, சிற்றெறும்பாய் பரங்கியர்கள் தோற்று நின்றார் உத்தமர் காந்தியின் உண்ணா நோன்பு, உலகப் போர் முறை காணாத ஒன்று! மேலாடை துறந்த இந்திய தந்தைக்க...

தூண்டிலிடும் உன்விழிகள்

Image
நெற்கதிரின் குனிவை கண்டேன் நின் முகத்தில் நாணம் கண்டேன்! விற்போரில் வீரம் கொண்டேன் விழிவீச்சில் தூரம் நின்றேன்! முத்துக்கள் மாலை என்றேன் முல்லையவள் சிரிக்கக் கண்டேன்! கிள்ளை குயில் மொழிகள் என்றேன் கீதைமொழி உன்னதென்று கிறங்கி நின்றேன்! அன்னம் நடைபயில ஆசை கொண்டேன் அடியொற்றும் நடை உனதா? ஆவல்கொண்டேன்! நாணயங்கள் சிதறுகின்ற ஓசைகேட்டும் நாணமகள் கைவளையள் ஓசையென்றேன்! மலர் வனத்தில் பூக்கள் எல்லாம் மலர்ச்சிகொள்ள மங்கையவள் சேலையென மயக்கம் கொண்டேன்! வண்ணநிலா வானெழுந்து மயக்கக்கண்டேன் பொன்மகளே உன்வதனப் பொலிவுகண்டேன்! புல்மடியில் பனித்துளிகள் பூக்கக் கண்டேன் உன்னிமையில் பூத்திருக்கும் வியர்வை கண்டேன்! செவ்வானம் கீழ்க்கடலில் புலரக்கண்டேன் செம்மலரே உன்சிவந்த முகமே கண்டன்! தூண்டிலிலே சிக்கிவிடும் மீன்கள் கண்டேன் தூண்டிலிடும் உன்விழியில் சிக்கிக்கொண்டேன்!

மருந்தாளும் வேந்தர் தினம் 25th September

Image
பிணி நீக்கும் பணி ஏற்றோம் வினை தீர்க்கும் வித்தை கற்றோம் நஞ்சையும் அமிழ்தாக்கி நலம் செய்தோம் உயிர்காக்கும் மருத்துவரின் உற்றதுணை நாமானோம். முப்பொழுதும் திறந்திருக்கும் மருந்தகமும் நமதே! மருந்துச்சீட்டு தலையெழுத்தின் விடையறிவோம் நாமே! மருத்துவர்கள் அறியாத  கிராமத்து வைத்தியரும் நாமே! மருந்துசெய் கெடுவிளைவை புரிந்துசொல்லும் பிரம்மா நாமே! எப்போதும் மக்கள்பணி இறைபணியாய் முன்நிற்கும் மனிதகுலம் காக்கும் புனித குலம் நமதன்றோ!

தமிழ்த் தாய் வாழ்த்து

Image
பொதிகை மலை உகுத்த பொன்னுருக்கு எழிலருவி; வைகை வாழ் நாட்டில் வளர்ந்திட்ட இளங்குமரி; குள்ள மா முனிவன் குடில் பெற்ற அருட்செல்வி; குடகுமலைக் காவிரியில் குதித்தாடும் பைங்குமரி; செம்மையுரை வள்ளுவரின் செந்நாக்கு பேசும் மொழி; வள்ளல் கடையெழுவர் வாழ்வித்த உயிர் மூச்சு; தொட்டில் இளங் குழந்தை துயிலூட்டும் தாலாட்டு; நளினக் காற்சதங்கை நடைமாற்றும் இசைக்கூத்து; எழிலொழுக ஒவியத்தில் எழுதுவித்த குயிற்பாட்டு; நாற்று நடும் உழத்தியரின் நாவளைத்த இசைப்பாட்டு; குதித்தோடும் காவிரியின் குற்றாலக் குளிர்சாரல்; திகட்டாத நறும்பூக்கள் தேடிவந்த தேன்தென்றல்; பகட்டாக வானெழுந்த பல்வண்ணப் பட்டாம்பூச்சி; ஔவை மூதரசி அணிந்திருந்த பொன்மகுடம்; பாட்டரசன் பாரதி மீட்டுவித்த நல்வீணை; கட்டுத் தறி கூட கனிவாய் பேசும் கவிதை; தமிழ்- மெல்லியல்பில் இளங்குமுதம் மேன்மையிலே நல்லமுதம் உயர்சிறப்பில் பனி இமயம்- உயர்வுக்கு உயிரே ஈந்தாலும் தகும்!

தலைவன் வந்தான்

Image
பூவிழித் தாரகை பூண்டது நித்திரை பூம்பொழில் சிலிர்த்து பூமணம் நிறைக்க நாழிகை நகர்கையில் நல்லதோர் கவிதை மெல்லிசை பின்வர மென்மையாய் இனித்தது ஏழிசைப் பெண்குயில் ஏக்கமாய்க் கூவிட வானெழும் சூரியன் வதனப் பார்வையில் கானகம் நிறைத்த காரிருள் நாயகி நளினச் சிரிப்புடன் நாணமாய் விலகினாள். குவளை பூத்த குளக்கரைப் படியினில் கவலை பூண்டு காதலி நானழ தேதமிழ்த் தலைவன் தேடினான் இல்லையோ? வருதல் உரைத்து மாறுதல் ஏனோ? முல்லைச் சிரிப்பின் முகவரி தொலைந்ததோ? கொவ்வை இதழ்கள் வெம்மை ஈந்ததோ? குழலும் யாழும் குரலினும் இனித்ததோ? கோலக் கருவிழி கொஞ்சுதல் கசந்ததோ? நிகழும் யாவும் நினைவினில் இல்லையோ? ஏனோ தலைவன் என்திசை வந்திலன்? நெஞ்சம் நஞ்சென  நெருடும் வேளையில் வேங்கைப் பாய்ச்சலில் வெண்ணிறப் புரவியில் செந்நிறச் சூரியன் செங்கடல் எழுகையில் ஆத்தி மாலை அணிசெய் மார்பில் முத்தின் வகையென பூத்திடும் வியர்வையில் முத்துச் சிரிப்பின் முகவரி கண்டு எந்தன் நாயகன் என்னிடம் வந்தான் ’அன...

நாகை தேசிய மேல்நிலைப் பள்ளி

Image
  தேசிய மேல்நிலைப்பள்ளி- நான் பூசிக்கும் கோயிலன்றோ?! கல்விக் கண்திறந்த சான்றோர் நல்லறம் நடத்திய மன்ற மன்றோ?! காலம் தவறாமைக்குத் தமிழாசான் விஸ்வநாதன்(TV) தலைமைப் பண்புக்கு தங்கநிகர் இராமசீனிவாசன்(HM Sir) வேதியல் வித்தகர் வேந்தர்நிகர் இராமசாமி(LR) இயற்பியலின் தந்தை இன்முகமாய் தியாகராஜன்(VT) கணிதப் புலியன்றோ?! கம்பீர விஜயராஜ்(RVR) கலைஇலக்கியப் பேரொளி கடமைதவறா பத்மா அம்மையார்  அன்னை தமிழுக்கு அணிசேர்த்த மாமன்னர் மீனவன் கரைகாணா மாணவர்க்கு கரம் கொடுத்த துவாரகைக் கண்ணன் (RTK) சொந்தப் பிள்ளை போல சொல்லிக் கொடுப்பாரே காந்திமதி தாயார்! எண்ணிலடங்கா வேந்தர்கள் எண்ணங்களில் சிம்மாசனமிட்ட நன்நாகை நகர் பெற்ற பொற்கோயில் அன்றோ எம்பள்ளி! அந்நாளை நினைத்து ஏங்கி அனுதினமும் தேடுகின்றேன் நான்பெற்ற செல்வங்கள் நல்லதொரு கல்விகாண! கொட்டிக் கொடுத்தாலும் கிடைப்பதில்லை கோவேந்தர் கொடுத்த கல்வி! வையத்தில் வாழ்வுதந்த வேந்தே! வணங்க வேண்டும் உம் கால்கள் எங்கே?! கோ. பார்த்தசாரதி

அத்திவரதர்

Image
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஒரு அதிசய நிகழ்வாக அத்திவரதர் எழுந்தருளும் வைபவம் இந்த ஆண்டு நிகழ்திருக்கிறது. வரதராஜ பெருமாள் கோயிலின் அனந்தசரஸ் திருக்குள நீருக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டு 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை 48 நாட்களுக்கு மட்டும் வழிபடப்பட்டு மீண்டும் திருக்குள நீரில் மூழ்கிவைக்கப்படும் அதிசயம் இப்போது நம் அனைவருக்கும் தெரியவந்திருக்கிறது. மேலும் இந்த அத்திவரதர் அத்திமரத்தால் வடிக்கப்பட்டவர் என்பது கூடுதல் சிறப்பு. இந்த நூற்றாண்டு கடந்த வைபவம் பிரதமர், ஜனாதிபதி தொடங்கி அனைத்து மாநிலத்தவரையும் ஈர்த்து குறுகிய காலத்தில் பெரும் கவனம் பெற்றது நம்மை ஆச்சர்யப்படவைக்கும் அற்புத நிகழ்வே! இதற்குமுன் 1854, 1892, 1937, 1979 ம் ஆண்டுகளில் அத்திவரதர் எழுந்தருளும் வைபவம் நடந்திருக்கிறது. இந்த ஆண்டும் 1-7-2019 முதல் 17-8-2019 வரை நடைபெற்று நிறைவுற்றிருக்கிறது. ஆத்திவரதர் என்னை ஆட்கொண்டு தனது நிறைவு நாளில் ஒரு பாமாலை சூட்ட என் உள்ளத்தில் பணித்ததால் இக்கவிதையை சிரமேற்கொண்டு எழுதிபரவசமுற்றேன். கலியுக வரதனே காஞ்சியின் வரதனோ! தடாகம் பூத்தெழுந்த தாமரை மணாளனோ! வராது வந்த மாமணியே...

நட்பின் இலக்கணம் கண்ணனும் குசேலனும்

Image
ஆரியகுலத்தின் மேவிய செல்வன் நேரிய வழியினன் நேர்மைக் குசேலன் காரியவண்ணன் கருணை வள்ளல் பாரின் வேந்தன் கண்ணனின் நண்பன் சீரிய நட்பின் ஓவிய இலக்கணம் பாரினில் வாழ்ந்திட இருவரும் வாழ்ந்தனர் பாரினை விளக்கும் பகலவன் குலத்தின் பண்பிற் சிறந்த பெரியோர் வாழிடம் தோழர் இருவரும் தொழுதே கற்று நேசக் கரங்களை நெருக்கிப் பிடித்தனர் காலக் குதிரையோ கடிதாய் விரைந்தது கல்விக் கடலின் கரைதனைக் கண்டனர். கருவிழியழவும் கைகள் நெகிழவும் இருவர் மனத்திலும் ஏக்கப் பிரிவுகள் ஆண்டுகள் கடந்ததும் மாண்டன நினைவுகள் அருமைக் கண்ணனோ ஆயர் தம் வேந்தன்! அந்தணன் குசேலனோ நொந்தனன் வாழ்வை ஓட்டைக் குடிசையும் மனைவியும் மக்களும் ஏக்க மனத்தினன் போக்கிடம் அறிந்திலன் கண்ணனைக் கண்டு கனிந்திட எண்ணினான் பொன்னொளி நிகர்த்த புவியின் வேந்தன் வெள்ளைச் சிரிப்பில் முல்லையை வென்றவன் வானவர் வாழ்த்திட வாழும் கண்ணனின் துவாரகா புரிக்கு வந்தான் குசேலன் நோக்கும் இடமெலாம் தேக்கும் வாழையும் வானையும் எட்டும் வைக்கோற் குவியல்கள் அன்புக் கண்ணனின் அரண்மனை தொட்டிட எண்ணி எண்ணி நகர்த்தினான் கால்களை வாயிற் கா...

விண்ணைத் தாண்டிய காதல்- சந்திரயான் -2

Image
இன்று 22 July 2019 நம் நாடு நாம் அனைவரும் பெருமை கொள்ளும் சரித்திர சாதனையாக நிலவுக்கு சந்திரயான் - 2 என்னும் விண்வெளி ஓடத்தை வெற்றிகரமாக அனுப்பி உள்ளது. மேலும் அதை நிலவின் பரப்பில் இறக்கி சாதனை படைக்க காத்திருக்கிறது... அதன் பொருட்டு என் வாழ்த்து மடல் இது... இளமதிமேல் மையல் கொண்ட இந்தியரின் தூதுவனாய்- நம் இளவயது கனவுகளை ஏந்தி வரும் மலர்க்கணையாய் ! சோறூட்டும் அன்னை நிலா மடி சேரும் மழலைகளாய் ! விண்ணைத் தாண்டி நம்காதல் வெண்ணிலவைத் தொட்டது இன்று ! அன்னை மடிபோய் விழுந்தாய் விக்ரம்! அந்த நொடி நின்று போனதே இதயம்! சென்று சேர்ந்த உன் தகவல் வருமா? கன்றுகள் கேள்விக்கு என்ன நாங்கள் சொல்ல? ஒன்று மட்டும் உறுதி செய்தாய் நன்று! என்றுமிலா வேட்கையுடன் எமதுமனம் இன்று! அறிவியல் சிறகை விரித்தது நாடு அடிமை மாயைகள் அகன்றதே இன்று! இந்தியச்சாதனைக்கு ஏது எல்லை  ? சந்திரயானுக்கு ஈடு இணை யில்லை! கவிஞர்: கோ.பார்த்தசாரதி

தாமரையின் காதல்

Image
கதிரவனைக் கண்டு தாமரை காதல்கொள்ள, அதைக் கேள்விப்பட்டு தென்றல் ஊரெல்லாம் புரளி பேச, தேனீக்களோ மலர்தோறும் சென்று இந்த கிசுகிசுவைப் பரப்பிவிட ... அதன் பின்னர் இயற்கையில் நடக்கும் பலவற்றை கற்பனையில் வடித்து புனைந்துள்ளேன்.. இக்கவிதை தங்கள் பார்வைக்கு... காலை இளம்பரிதி கண்டு காதலில் மலர்ந்த குமுதம் ஊரார் அறிய அலர்தூற்றி உள்ளம் மகிழும் தென்றல் சோலை நிறைந்த மலர்கள் காதில் கதைசொல்லும் தேனீ பாடி வரவேற்கும் குயில்கள் ஆடல் அரங்கேற்றும் மயில்கள் தாளம் இசைகூட்டும் மந்தி தாவிக் குதித்தோடும் மான்கள் வண்ணம் தீட்டிய வானம் பொன்மஞ்சம் அமைத்த மேகம்! கவிதை பாடிவரும் கரிவண்டு கரம்கோர்த்து ஆடும் மலர்ச்செண்டு மடியில் விழுந்த பனித்துளிகள் மாலையாய் கோர்க்கும் புற்கொடிகள் வளையல் பூட்டிய வானவில் வளைத் தோரணம் அமைத்த கொன்றை வெட்கித் தலைகுனியும் வாழை வெண் நிலவைத் தேடிடுமே அல்லி! மதிமறந்து உறங்கும் மாந்தர் செவி புகுத்து தென்றல் சொல்லும், கழனி பூத்த தாமரைக்கும் காலை எழும் கதிரொளிக்கும் மாலை சூட்டி மகிழ்வதற்கு - நல்ல வேளை ஒன்று வந்தது என்று!  கவிஞர் : கோ.பார்த்தசாரதி ...

மனம் குளிரும் மழை அழகு

Image
அது என் கல்லூரி வாழ்க்கையின் முதலாம் ஆண்டு . 1994 மேல்மருவத்தூர் சூழல் எனக்கு புதுமையானது. வெளியெங்கும் ஆளரவமற்ற தனிமை குடிகொண்டிருக்கும். நண்பர்களை விட்டால் வேறு உலகத் தொடர்பே இருக்காது. நல்ல வேளை அப்போது ஆண்ட்ராய்டு கைப்பேசிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் தான் எனது கல்லூரி வாழ்க்கை எனக்கு ஏராளமான அன்பு நண்பர்களைப் பெற்றுத் தந்தது... ஒரு முறை ஒரு அழகிய மழைக்காலத்தில் என் கவிஆர்வம் துளிர் விட இந்த கவிதையை எழுதினேன்.. என் நண்பர்கள் வெகுவாக பாராட்டி... மறுநாள் கல்லூரி வகுப்பு நேரத்தில் ஆசிரியரிடம் கூறிவிட்டார்கள். அவரும் ஆர்வமிகுதியில் நண்பனை அனுப்பி விடுதியிலிருந்து எனது கவிதைப் புத்தகத்தை எடுத்துவரச் செய்து வகுப்பறையில் அனைவர் மத்தியில் உரக்கப் படிக்கச் சொன்னார். அப்போது அனைவரது பாராட்டுக்கும் உள்ளானேன். அன்று முதல் நான் நான்கு சுவர்களுக்குள் எழுதிய கவிதைகளை பொதுவெளியில் வெளியிடும் துணிவு கொண்டேன். பிறகு நான் கல்லூரியில் ஒரு கவிஞனாக அறியப்பட்டேன். இக்கவிதை என்னை முழு கவிஞனாக நண்பர்களுக்கு அடையாளப்படுத்திய மறக்க முடியாத கவிதை ... தமிழின் சிறப்புகளில் ஒன்று... ஒரு எழுத்து வார்த்தைக...

உயிரே காதலில் உருகுதடி

Image
என் இளம் பருவத்தில் காதல் கவிதைகளை எழுதிக் குவித்திருக்கிறேன்.. அனைத்தும் கற்பனையாய் எழுதப்பட்டவையே என எடுத்துச் சொன்னாலும் நம்பக்கூடியவர்கள் ஒருவரும் இல்லை. எவர் என்ன சொன்னால் என்ன ... எனது படைப்புகள் ஏட்டுச் சுரைக்காய்களாய் இருந்து செல்லரித்து போய் விட விரும்பவில்லை... இது ஒரு தலைவன் தலைவியிடம் கொண்ட காதலால் பிதற்றும் கவிதை... முத்துக்கள் கோர்த்தது உன் சிரிப்பு முத்தங்கள் கோர்த்திட எனக்குள் தவிப்பு  சித்திரம் பேசும் உன் கண்கள் நித்திரை மறந்தன என் விழிகள் வருடாமல் வருடவந்த வாச மலரே - உனக்கு வரவேற்புக் கோலமிட வானவில்லை அழைக்கின்றேன். மறுக்காமல் ஏற்றுக் கொள் என்  மனமெனும் மலர்ச்செண்டை நெருக்கமாய் கேட்டுப் பார்  என் இதயத் துடிப்பில் உன் பெயர் கேட்பதை வஞ்சித்து சென்று விட நான்  உன் போல் வஞ்சியல்ல நெஞ்சைத் திறந்து சொல்வேன்  நினைவெல்லாம் நீதானென்று வர்ணணை செய்ய வார்த்தைகளைத் தேடவில்லை வரிகளை எழுத வைரங்களைத் தேடுகிறேன் சங்கீதம் கற்றுக்கொள்கிறேன் நான் - ஆம் கலகலக்கும் உன் காற்கொலுசைக் கேட்டுப்பார்! படபடக்கும் உன் இமைகளைக் கேட்டுப் பார் !...

இந்திய சுதந்திரப் பொன்விழா 1997

Image
நம் இந்திய தேசம் அடிமைத்தளையிலிருந்து 1947 ல் விடுபட்டு ஐம்பது ஆண்டுகளைக் கடந்து வீறுநடை போட்ட தருணம்...1997ல் நம் நாடே மகிழ்ச்சியாக கொண்டாடியது. அந்த "சுதந்திரப் பொன் நாள்" நாம் அடிமைத்தனத்திலிருந்து வெகு தொலைவு வெற்றிகரமாக கடந்து வந்து விட்டோம் என நமக்கு நினைவூட்டி பெரு மகிழ்ச்சியளித்த தருணம் அது. இப்போது நாம் நூற்றாண்டு கொண்டாட்டத்தை நோக்கி விரைவாக வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறோம்.. இந்த நேரத்தில் எனது பழைய சுதந்திரப்பொன்விழா கவிதை எக்காலத்திற்கும் பொருந்துவதை எண்ணி அசை போட்டுப் பார்க்கிறேன். அக்கவிதை இதோ! பொழுதெல்லாம் புல்மடியில்        புரண்டு போகப் புலர் காலைப் பனித்துளிகள்         புகையாய்ச் சூழ விரிகதிரோன் வருகை தர          விடிவெள்ளி பிரிவு பெற மலரேந்தும் சோலையெல்லாம்         மதுவேந்தி மயங்கி வீழ மதுவெறியில் மதிகெட்டு - கரிவண்டு         ரீங்கார முழக்கமிட மஞ்சள் கீழ் வானம்         மணப் பெண்போல் கோலமிட விரிகதிரோன் கண்ணசைவில் ...